மானாமதுரையில் பள்ளிக்கு சென்ற பிளஸ் 2 மாணவி கடத்தல்? - போலீசார் விளக்கம்
மாணவி இன்று காலை பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்;
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த மாணவி பிளஸ் 2 பயின்று வருகிறார்.
இதனிடையே, அந்த மாணவி இன்று காலை பள்ளிக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது, அந்த மாணவியை காரில் வந்த கும்பல் கடத்தி சென்றதாக தகவல் வெளியானது.
பள்ளி அருகே சென்றபோது அந்த காரில் இருந்து இறங்கிய 6 பேர் கொண்ட கும்பல், மாணவியை காரில் கடத்தியதாக தகவல் வெளியானது. மேலும், பஸ் ஸ்டாண்ட் அருகே சென்றபோது அந்த மாணவி காரில் இருந்து வெளியே குதித்து தப்பியதாகவும், படுகாயமடைந்த சிறுமியை மீட்ட அங்கிருந்தவர்கள் மீட்டு மானாமதுரை மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில், மானாமதுரையில் பிளஸ் 2 மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தியதாக வெளியான தகவல் தவறானது என்று சிவகங்கை போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக சிவகங்கை மாவட்ட காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், பிளஸ் 2 மாணவி காரில் கடத்தப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததுடன், பிளஸ் 2 மாணவியிடம் விரிவான விசாரணை நடத்தியதில் அப்படி எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.