திருப்பூரில் ரூ. 949 கோடி மதிப்பீட்டிலான 61 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
ரூ. 295 கோடியே 29 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 19,785 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் வழங்கினார்.;
திருப்பூர்,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.08.2025) திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ. 949 கோடியே 53 லட்சம் செலவில் 61 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.182 கோடியே 06 லட்சம் மதிப்பீட்டிலான 35 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, ரூ. 295 கோடியே 29 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 19,785 பயனாளிகளுக்கு வழங்கினார்.
திருப்பூர் மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்ட முடிவுற்ற பணிகளின் விவரங்கள்:-
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், திருப்பூர் மாநகராட்சியில் விடுபட்ட பகுதிகளில் ரூ. 798 கோடியே 88 லட்சம் செலவில் பாதாள சாக்கடை பணிகள்;
திருப்பூர் கோவில்வழி பகுதியில் ரூ. 34 கோடியே 80 லட்சம் செலவில் புதிய பேருந்து நிலையம்;
மூலனூர் பேரூராட்சி, அண்ணாநகரில் ரூ. 2 கோடியே 8 லட்சம் செலவில் மேம்படுத்தப்பட்ட வாரச்சந்தை;
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுசேவை மையக் கட்டடங்கள், உணவு தானியக் கிடங்குகள், ஆரம்ப சுகாதார நிலையக் கட்டடங்கள், ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டடங்கள், நியாய விலைக் கட்டடங்கள், நூலகக் கட்டடங்கள், உணவு சேமிப்புக் கிடங்கு, அங்கன்வாடிக் கட்டடங்கள், வட்டார சுகாதார நிலையம், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் வகுப்பறைக் கட்டடங்கள், சமுதாயக் கூடங்கள், துணை சுகாதார நிலையங்கள் என ரூ. 10 கோடியே 90 லட்சத்து 76 ஆயிரம் செலவிலான முடிவுற்றப் பணிகள்;
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், பல்லடம் சேமிப்புக்கிடங்கில் ரூ. 2 கோடியே 36 லட்சத்து 33 ஆயிரம் செலவில் கூடுதலாக 3400 மெ.டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு;
நீர்வளத் துறை சார்பில், காங்கயம் வட்டம், வீரணம்பாளையம், காட்டுநாயக்கன்பாளையம் அருகில் வட்டமலைகரை ஓடையில் ரூ. 3 கோடியே 91 லட்சம் செலவில் தடுப்பணை;
மகளிர் திட்டம் சார்பில், தளி பேரூராட்சி, திருமூர்த்தி மலை பஞ்சலிங்கஅருவி செல்லும் வழியில் ரூ. 10 லட்சம் செலவில் 1 தற்காலிக மதி அங்காடி;
தொழில் முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில், திருப்பூர் திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் ரூ. 39 கோடியே 44 லட்சம் செலவில் மினி டைடல் பூங்கா;
வனத்துறை சார்பில், சின்னார், மனுப்பட்டி, காங்கயம் ஆகிய இடங்களில் ரூ. 20 லட்சத்து 57 ஆயிரம் செலவில் வனச்சோதனை சாவடிகளில் முன் கள பெண் வன ஊழியர்களுக்கான உள்கட்டமைப்பு வசதிகள், அமராவதி வனச்சரகத்தில் ரூ. 11 லட்சத்து 57 ஆயிரம் செலவில் வனக்காவலர் குடியிருப்புகள்;
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அவிநாசி அரசு மருத்துவமனையில் ரூ. 6 கோடி செலவில் தாய் சேய் நலப் பிரிவுக் கட்டடம், 15.வேலம்பாளையத்தில் ரூ. 48 கோடியே 68 லட்சம் செலவில் புதிய அரசு மருத்துவமனை, ரூ. 50 லட்சம் செலவில் குன்னத்தூர் வட்டார பொது சுகாதார அலகு, பள்ளபாளையம், அங்கேரிபாளையம், ஈ.ஆர்.பி.நகர் ஆகிய இடங்களில் ரூ. 90 லட்சம் செலவில் துணை சுகாதார நிலையக் கட்டடங்கள்;
பால்வளத் துறை சார்பில், தளவாய்ப்பட்டணம் மற்றும் தண்ணீர்பந்தல் பாளையம் ஆகிய இடங்களில் ரூ. 65 லட்சம் செலவில் தொகுப்பு பால் குளிர்விப்பு நிலையங்கள்;
என மொத்தம், ரூ. 949 கோடியே 53 லட்சம் செலவில் 61 முடிவுற்றப் பணிகளை மாண்புமிகு முதல்-அமைச்சர் இன்றைய தினம் திறந்து வைத்தார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.