காரைக்குடி - ஹூப்ளி இடையே சிறப்பு ரெயில் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு காரைக்குடி - ஹூப்ளி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.;
கோப்புப்படம்
சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு பயணிகளின் வசதிக்காக காரைக்குடி - ஹூப்ளி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
சுதந்திர தினத்தையொட்டி பயணிகளின் வசதிக்காக கூடுதல் நெரிசலை தவிர்க்க காரைக்குடி - ஹூப்ளி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. ஹூப்ளியில் இருந்து வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு இயக்கப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண் 07331) மறுநாள் காலை 11 மணிக்கு காரைக்குடியை வந்தடையும்.
மறுமார்க்கமாக காரைக்குடியில் இருந்து 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (07332) மறுநாள் மதியம் 2.40 மணிக்கு ஹூப்ளியை சென்றடைகிறது. 17 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த சிறப்பு ரெயில் புதுக்கோட்டை, திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் வழியாக செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.