தேசிய ஜனநாயக கூட்டணியில் மீண்டும் இணைகிறாரா? ஓ.பி.எஸ்க்கு பாஜக அழைப்பு
பாஜக அழைப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.;
சென்னை,
தமிழகத்தில் வரும் ஏப்ரல் - மே மாதங்களுக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் தற்போதே அரசியல் பரபரப்புகள் அரங்கேற ஆரம்பித்துவிட்டன. தமிழகத்தில் ஆளும் திமுக கூட்டணி வலுவாக உள்ள நிலையில், பிரதான எதிர்கட்சியான அதிமுகவும் வலுவான கூட்டணி அமைக்க முயற்சித்து வருகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை கழற்றி விட்ட அதிமுக, சட்ட சபை தேர்தலுக்காக மீண்டும் பாஜகவுடன் கை கோர்த்துள்ளது.
இதனால் ஏற்பட்ட பல்வேறு சூழல் காரணமாக பாஜக கூட்டணியில் நீண்ட காலமாக அங்கம் வகித்து வந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம், பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.தமிழகம் வந்த பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வம் நேரம் கேட்டிருந்த நிலையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதுவே அவர் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதற்கான காரணமாக கருதப்பட்டது.
பிரதமருடன் சந்திப்பு பிரச்சினையில் நேரம் கேட்டு எழுதியிருந்த கடிதத்தையும், மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அனுப்பிய செல்போன் மேசேஜ் போன்றவற்றையும் காட்டி ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினையும் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். அந்த சந்திப்பு தொடர்பாக பேட்டி அளித்த ஓ.பன்னீர்செல்வம், அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை, அரசியலில் எதுவும் நடக்கலாம் என்று தெரிவித்தார்.பாஜக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசியதும், அவரது பேட்டியும் வலைத்தளங்களில் பல்வேறு யூகங்களை கிளப்பி விவாதமாக மாறியது.
இந்த நிலையில், பாஜக தரப்பில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்திடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நேற்று, ஓ.பன்னீர்செல்வத்தை தொலைபேசி மூலம் தமிழக பாஜக நிர்வாகிகள் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, ஓ.பன்னீர்செல்வத்திடம், பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் சென்னை வர உள்ளார். அவர் உங்களை சந்திக்க விருப்பப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ம் இதற்கு ஓ.பன்னீர்செல்வம், நான் எனது ஆதரவாளர்களுடன் பேசிய பிறகே இதுகுறித்து முடிவு செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.
பாஜக அழைப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பா.ஜனதா தரப்பு கூறும்போது, ‘ஓ.பன்னீர்செல்வம் எங்களுடன் இருக்கவே விரும்புகிறோம். பிரதமர் மோடி 3-வது வாரத்தில் தமிழகம் வர உள்ளார். அந்த நேரத்தில் அவரை சந்திக்க வைக்க ஏற்பாடு செய்யப்படும்' என்றனர். இந்த நிலையில் சென்னை வரும் பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ், அக்கட்சி நிர்வாகிகளுடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆலோசனை நடத்துகிறார்.