ஆசிரியையை கொலை செய்தது ஏன்? - கைதான கணவர் பரபரப்பு வாக்குமூலம்
மருத்துவமனைக்குள் புகுந்த விஷ்ருத் தனது மனைவியை கத்தியால் குத்திக்கொலை செய்தார்.;
கரூர்,
கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பட்டவர்த்தி பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ருத் (வயது 30). இவரது மனைவி ஸ்ருதி(27). ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவரை சென்னையில் வேலை பார்த்தபோது விஸ்ருத் காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். விஷ்ருத் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
ஸ்ருதி திருச்சி மாவட்டம் முசிறி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக தனது மனைவியை விஷ்ருத் அடித்துள்ளார். பின்னர் அவரே தனது மனைவியை குளித்தலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை மருத்துவமனையில் புகுந்த விஷ்ருத் தனது மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதுகுறித்து பணியில் இருந்த டாக்டர் அளித்த புகாரின் பேரில் குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய விஷ்ருத்தை தேடி வந்தனர். இதையடுத்து குளித்தலை அருகே உள்ள குமாரமங்கலம் பகுதியில் பதுங்கி இருந்த விஷ்ருத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அப்போது விஷ்ருத் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் சென்னையில் வேலை பார்த்தபோது ஸ்ருதியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். பின்னர் நாங்கள் இருவரும் சென்னையில் வசித்தபோது ஸ்ருதி, ஒரு நபருடன் பேசி பழகி வந்தார். இதனை அறிந்த நான் அவரை கண்டித்தேன்.
ஆனால் அவர் அந்த நபருடன் பேசுவதை கைவிடாத நிலையில் அவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அழைத்துக்கொண்டு, எனது சொந்த ஊரான பட்டவர்த்திக்கு வந்தேன். இங்கு வந்த பின்னர் ஸ்ருதி வேறு ஒரு நபரிடம் பேசி பழகி வந்துள்ளார். இதனை அறிந்த நான், எனது மனைவி ஸ்ருதியை கண்டித்தேன்.
இதனால் எனக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நான் அவரை தாக்கினேன். காயம் அடைந்த அவரை குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் ஆத்திரம் தீராத நான் நேற்று முன்தினம் காலை அவரை கத்தியால் குத்திக் கொலை செய்தேன். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து விஷ்ருத்தை போலீசார் குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.