ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.;
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கர்நாடக அணைகளான கபிணி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயரத் தொடங்கியது. நேற்று ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 78 ஆயிரம் கன அடியாக இருந்தது.
இந்நிலையில், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று வினாடிக்கு 1 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 1.05 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது.
நீர் வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் 3வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.