திருட வந்த வீட்டில் போதையில் அயர்ந்து தூங்கிய வாலிபர் - போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்
ஜவுளிக்கடை மாடியில் இருந்த கதவின் பூட்டை உடைக்க முயற்சி செய்ததும், அது முடியாமல் போகவே போதையில் அங்கு தூங்கி விட்டதும் தெரிய வந்தது.;
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் அதிக அளவு நூற்பாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்களே பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு கடை வீதியில் 2 வடமாநில வாலிபர்கள் போதையில் சுற்றி திரிந்தனர். அவர்கள் இரவு நேர வேலைக்கு செல்பவர்களாக இருக்கலாம் என நினைத்து வியாபாரிகள் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த பஷீர் என்பவர் தனது வீட்டு மாடிக்கு சென்ற போது அங்கு ஒருவர் தூங்கிக் கொண்டு இருந்தார்.
இதை பார்த்ததும் அதிர்ச்சியடைந்து அக்கம் பக்கத்தில் இருந்த வர்களை அழைத்து அந்த வாலிபரை எழுப்ப முயன்றார். அப்போதுதான் அவர் அளவுக்கு அதிகமான போதையில் இருந்தது தெரியவந்தது. மேலும் ஜவுளிக்கடை மாடியில் இருந்த கதவின் பூட்டை உடைக்க முயற்சி செய்ததும், அது முடியாமல் போகவே போதையில் அங்கு தூங்கி விட்டதும் பொதுமக்களுக்கு தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த வாலிபர் போதையில் இருந்ததால் எதுவும் பேச முடியவில்லை. அவருடன் வந்த மற்றொரு வடமாநில வாலிபர் தப்பி ஓடியது தெரிய வரவே அவரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர்கள் 2 பேரும் டாஸ்மாக் கடையில் மது குடித்து விட்டு இரவு 11 மணிக்கு மேல் மக்கள் தூங்கியவுடன் திருட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் போதை அதிகமானதால் ஒருவர் அங்கேயே தூங்கி விட்டதும், மற்றொருவர் தப்பிச் சென்றதும் விசாரணையில் தெரிய வந்தது.