சிவகங்கை மாவட்டத்தில் நாளை முதல் 2 நாட்கள் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாள் ஒன்றுக்கு 2 முதல் 3 சட்டமன்ற தொகுதிகளில் பிரசாரம் செய்து வருகிறார்.;

Update:2025-07-28 16:07 IST

சிவகங்கை,

தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கினார். சட்டசபை தொகுதி வாரியாக "மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்'' என்ற பெயரில் அவர் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள் (புதன்கிழமை) ஆகிய 2 நாட்கள் சிவகங்கை மாவட்டத்தில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்கிறார். சட்டமன்ற தொகுதிக்கு ஒரு இடம் என்ற வகையில் அவர் பிரசாரம் செய்கிறார். அதன்படி காரைக்குடி, திருப்பத்தூர், சிவகங்கை, மானாமதுரை ஆகிய 4 இடங்களில் அவர் பேசுகிறார்.

அவரது சுற்றுப்பயண விவரம் வருமாறு:-

நாளை மாலை 4.30 மணி அளவில் காரைக்குடி எம்.ஜி.ஆர். சிலை அருகில் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார். பின்னர் மாலை 5.30 மணி அளவில் திருப்பத்தூர் அண்ணா சிலை அருகேயும், இரவு 7:45 மணி அளவில் சிவகங்கை அரண்மனை வாசலிலும் மக்களை சந்தித்து பேசுகிறார். அன்று இரவு எடப்பாடி பழனிசாமி சிவகங்கையில் தங்குகிறார்.

பின்னர் நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் சிவகங்கை சன் ராக்ஸ் மகாலில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் மஞ்சுவிரட்டு பந்தயம், வடமாடு நலச்சங்கம், விவசாய சங்கம், விளையாட்டு வீரர்கள், தென்னை நார் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார்.

மாலை 4.30 மணி அளவில் மானாமதுரை தேவர் சிலை அருகே அவர் மக்களை சந்தித்து பேசுகிறார். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அவர் செல்கிறார். சிவகங்கை மாவட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி வருகையை முன்னிட்டு அதிமுக தொண்டர்கள், நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக மயிலாட்டம், ஒயிலாட்டம், தேவராட்டம், காளியாட்டம் போன்ற கலை நிகழ்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் அவரை வரவேற்று பேனர்கள், பிளக்ஸ்போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் வரவேற்பு தோரண வாயில்கள், வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்