ஆணவக்கொலை வழக்கில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்... கவினின் உறவினர்களிடம் உறுதியளித்த போலீசார்

கொலை செய்த சுர்ஜிதின் பெற்றோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதிமொழி அளித்தனர்.;

Update:2025-07-28 17:55 IST

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயி சந்திரசேகர் மகன் கவின்குமார். இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பனியாற்றி வந்தார். இவரை சுர்ஜித் என்பவர் நெல்லையில் வைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொன்றார். தனது அக்காவிடம் தொடர்ந்து பேசி வந்ததால், ஆத்திரமடைந்து சுர்ஜித், கவின் குமாரை வெட்டிக்கொலை செய்துள்ளார். காதல் விவகாரத்தில் நடந்த இந்த ஆணவக்கொலை சம்பவம் நெல்லை மற்றும் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த கொலை சம்பவத்தில் இளம்பெண்ணின் பெற்றோரான சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றி வரும் சரவணனும், கிருஷ்ணகுமாரிக்கும் தொடர்பு இருப்பதாக உயிரிழந்த கவின்குமாரின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். தொடர்ந்து, திருச்செந்தூர் - தூத்துக்குடி சாலை முக்காணியில் கவினின் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தனர். இந்த போராட்டத்தில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானவர்கள் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்றன. அந்த சாலை வழியாக வரும் வாகனங்களை மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன.

இந்த நிலையில், போராட்டம் குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் கடுமையான வாக்கு வாதம் ஏற்பட்டது.

தொடர்ந்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், ஆணவக் கொலை வழக்கில், கொலை செய்த சுர்ஜிதின் பெற்றோர் 24 மணி நேரத்தில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை உறுதிமொழி அளித்தனர். இதனை அடுத்து முக்காணி பகுதியில் கடந்த 3 மணி நேரமாக நடந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

எனினும், எஸ்.ஐ.களாக உள்ள இருவரும் கைது செய்யப்பட்ட பிறகே கொல்லப்பட்ட கவினின் உடலைப் பெற்றுக்கொள்வோம் எனவும் கவின் குமாரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சுர்ஜித் மற்றும் எஸ்.ஐ.கள் சரவணன், கிருஷ்ணகுமாரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்