தேமுதிக யாருடன் கூட்டணி? - விஜயபிரபாகரன் சொன்ன தகவல்
மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் எங்களது சுற்றுப்பயணம் இருக்கும் என விஜயபிரபாகரன் கூறினார்.;
கோவை,
கோவையில் நடந்த விழாவில் தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார். அதன்பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;
'உள்ளம் தேடி இல்லம் நாடி' என்ற தலைப்பில் பிரசார பயணத்தை நாங்கள் முன்னெடுக்கிறோம். தமிழகம் முழுவதும் இந்த சுற்றுப்பயணம் நடைபெற உள்ளது. எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தமிழகம் முழுவதும் சென்று மக்களை சந்தித்து பேச உள்ளார். முதற்கட்டமாக வருகிற 3-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை சில தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம். கட்சியை வலுப்படுத்துவதற்கும், மக்கள் மனதில் நம்பிக்கையை விதைக்கும் வகையில் எங்களது சுற்றுப்பயணம் இருக்கும்.
ஜனவரி மாதம் 9-ந்தேதி கடலூரில் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் நாங்கள் யாருடன் கூட்டணி என கூறுவோம் என ஏற்கனவே பொதுச்செயலாளர் கூறியிருக்கிறார். அன்றைய தினம் நாங்கள் யாருடன் கூட்டணி அமைக்க போகிறோம் என்பது தெரியும். வருகிற 5 மாதங்களும் கட்சி பணிகளையும், மக்கள் பிரச்சனைகளையும், கட்சியை வலுப்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்வதும் தான் எங்களுடைய எண்ணம். அதனை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறோம்."
இவ்வாறு அவர் கூறினார்.