விழுப்புரம்: வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் 7 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
காற்றுக்காக கதவை திறந்து வைத்து தூங்கியபோது மர்மநபர் சங்கிலியை பறித்துச்சென்றார்.;
விழுப்புரம்,
புதுச்சேரியை சேர்ந்தவர் சதீஷ். இவருடைய மனைவி திவ்யா (வயது 32). இந்த தம்பதிக்கு பிரவீன் என்ற மகன் உள்ளான். திவ்யா தனது மகன் பிரவீனை அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் விழுப்புரம் அடுத்த வளவனூர் அருகே வடவாம்பலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்திருந்தார். அன்று இரவு தனது மகன் மற்றும் தந்தை அசோக்குமார், தாய் பிரேமா ஆகியோருடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார்.
காற்றோட்டமாக இருப்பதற்காக வீட்டின் முன்பக்க கதவை திறந்து வைத்துள்ளனர். இதை நோட்டமிட்ட மர்மநபர் அதிகாலை 3 மணி அளவில் வீட்டிற்குள் நுழைந்தார். அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த திவ்யாவின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறிக்க முயன்றார். இதில் திடுக்கிட்டு எழுந்த திவ்யா தாலியை இறுக்கமாக பிடித்துக்கொண்டு திருடன்...திருடன்... என்று கூச்சலிட்டார்.
இதில் சுதாரித்துக்கொண்ட அந்த நபர் வேகமாக தாலி செயினை பறித்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இந்த சத்தம் கேட்டதும் அருகில் தூங்கிக்கொண்டிருந்த அசோக்குமார், பிரேமா ஆகியோர் எழுந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மர்மநபரை பிடிக்க முயன்றனர்.
ஆனால் அதற்குள் அந்த நபர் தாலி செயினுடன் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பிச்சென்றுவிட்டார். பறிபோன நகையின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.