வைணவம் என்பது பெருமாளை வழிபடும் ஒரு பிரிவே தவிர சாதி இல்லை: ஐகோர்ட்டு கருத்து
வைணவம் என்பது பெருமாளை வழிபடும் ஒரு பிரிவே தவிர சாதி இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.;
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த எல்.ரவி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோவிலில் கடந்த ஜூலை 4-ந்தேதி பிரசாத கடைக்கு ஏல அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில், ஏற்கனவே சேர்க்கப்பட்ட நிபந்தனையான, வைணவ பிராமணர் என்ற நிபந்தனை காரணம் எதுவும் கூறாமல் நீக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த அறிவிப்பை ரத்து செய்வதுடன், இன்று (புதன்கிழமை) நடைபெறும் ஏலத்துக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு பிளீடர் அருண் நடராஜன், “ஒரு பிரிவினருக்கு முக்கியத்துவம் கொடுத்து பிரசாத விற்பனையை அனுமதிக்க முடியாது. வைணவ கோவில்களில் பிரசாத கடை நடத்தி 5 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது'' என்று வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, “வைணவம் என்பது பெருமாளை வழிபடும் ஒரு பிரிவுதானே தவிர, அது தனிப்பட்ட ஒரு சாதி இல்லை. அதனால், பிரசாத கடை நடத்தும் விதிகளில் எந்த ஒரு விதிமீறலும் இல்லை. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்'' என்ற உத்தரவிட்டார்.