மதுரை சென்றடைந்தார் தவெக தலைவர் விஜய்
மதுரையில் 21-ந்தேதி நடைபெறும் தமிழக வெற்றிக் கழக மாநாடு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.;
மதுரை,
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது. இந்த நிலையில் கட்சியின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்க உள்ளது.
இதற்காக மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான ஏற்பாடு பணிகள் நடந்து வருகிறது. மாநாட்டு மேடை, மேல் இருக்கைகள், மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.
மாநாட்டு மேடை 216 மீட்டர் நீளம், 60 அடி அகலத்தில் அமைக்கப்பட்டு, அங்கு மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முக்கிய பிரமுகர்கள் அமருவதற்கு 200 இருக்கைகள் அமைக்கப்படுகின்றன. மேடையில் இருந்து விஜய், தொண்டர்களை நடந்து சென்று சந்திக்க 300 மீட்டர் நீளத்தில் ரேம்ப் வாக் நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு 21-ந்தேதி பிற்பகல் 3.15 மணி முதல் இரவு 7.15 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
காலை முதல் மாநாட்டு மேடையில் வேலுஆசான் தலைமையில் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து, உறுதிமொழி ஏற்பு, கொள்கை விளக்க பாடல், தீர்மானம் நிறைவேற்றம் ஆகியவற்றை தொடர்ந்து கட்சியின் தலைவர் விஜய் பேசுகிறார். முன்னதாக அங்கு அமைக்கப்பட்டுள்ள 100 அடி கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை விஜய் ஏற்றுகிறார்.
மாநாட்டு பணிகளை விரைவுபடுத்த அமைக்கப்பட்டுள்ள குழுவினர் மாநாட்டு திடலில் இரவு, பகலாக பணியாற்றி வருகிறார்கள். மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இப்போதே நிர்வாகிகள் வர தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், நாளை மறுநாள் தவெக மாநாடு நடைபெற உள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் தற்போது மதுரை சென்றடைந்துள்ளார். மாநாட்டு பணிகள் குறித்து இன்று மாலையில் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் இன்று முதல் மாநாடு நிறைவு பெறும் வரை விஜய் மதுரையில் தான் இருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.