குள்ளநரிகள் செய்யும் இடையூறுகளுக்கு அதிமுக அஞ்சாது - கே.சி.வீரமணி ஆருடம்
ஆம்புலன்ஸ்களை அனுப்புவது சிறுபிள்ளைத்தனமான செயல் என்று திமுகவை கே.சி.வீரமணி சாடினார்.;
சென்னை,
அதிமுக திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.சி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
அதிமுக் பொதுச்செயலாளர் எடப்பாடி மு. பழனிசாமி `மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக்கொண்டு, கடந்த 7.7.2025 முதல் சட்டமன்றத் தொகுதி வாரியாக தொடர் பிரசார எழுச்சிப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார். மக்கள் கடல் அலைபோல் கூட்டம் கூட்டமாக இந்த எழுச்சிப் பயணத்தில் கலந்துகொண்டு பேராதரவு அளித்து வருகின்றனர். இதைக்கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத திமுக ஆட்சியாளர்கள் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
ஆரம்ப கட்டத்தில் மின்சாரத்தை நிறுத்துவது; போக்குவரத்தை சீர்செய்யாமல், உரிய முறையான அனுமதி பெற்றிருந்தும்கூட காவல் துறையினரின் ஒத்துழைப்பைக் குறைப்பது போன்ற இடையூறுகளை தொடர்ச்சியாக செய்து வந்த நிலையில், தற்போது மக்களின் இன்னுயிரை காக்கக்கூடிய ஆம்புலன்சை, நோயாளிகள் இல்லாத நிலையிலும் மக்கள் கூட்டத்திற்கு இடையே செல்லவிட்டு, புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்தை சிதைப்பதற்கு தவறாகப் பயன்படுத்துகின்றனர். இது ஒரு முறையான செயல் அல்ல.
இதுபோல், பல இடங்களில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, கூட்டத்தினரிடையே ஆம்புலன்ஸ் வருவதும், அச்சமயங்களில் எடப்பாடி பழனிசாமி தமது உரையை நிறுத்திவிட்டு ஆம்புலன்சுக்கு வழிவிடுங்கள் என்று ஒவ்வொரு முறையும் அறிவுறுத்துவதும் அனைவரும் அறிந்ததே. இந்நிகழ்வுகள் ஊடகங்களிலும் வெளிவந்துள்ளது. ஆனால் நேற்று நடைபெற்ற பிரசாரத்தின்போது வந்த ஆம்புலன்சில், நோயாளிகளோ, அடிபட்டவர்களோ யாரும் இல்லாத நிலையில், எடப்பாடி பழனிசாமி அந்த ஆம்புலன்சில் நோயாளிகள் யாராவது இருக்கிறார்களா என்று பார்க்கச் சொன்னார்.
அதன்பேரில், ஒருசில தொண்டர்கள் விசாரித்தபோது, `அந்த ஆம்புலன்ஸ் நமது கூட்டத்தைக் கலைக்க வேண்டும் என்று திட்டமிட்டு வந்துள்ளது’ என்ற தகவல் கிடைத்த பிறகுதான், எடப்பாடி பழனிசாமி கடுமையாக எச்சரித்ததோடு, இதுபோன்று திட்டமிட்டு தவறு செய்பவர்கள் மீது காவல் துறையிடம் புகார் அளிக்குமாறு தெரிவித்தார்.
எடப்பாடி பழனிசாமி வீர உரை ஆற்றும் அதே நேரத்தில், கடல் போல் கூடியிருக்கும் மக்கள் கூட்டத்திற்கிடையே, அந்த மக்களை இருகூறாக பிளப்பது போலவும், அங்கு கூடியிருக்கும் மக்கள் மீது மோதி, அவர்களை ஆபத்திற்குள்ளாக்குவது போலவும், அங்கு அந்த ஆம்புலன்ஸ்களை அனுப்புவது போன்ற சிறுபிள்ளைத்தனமான செயலை இந்த திமுக ஆட்சியார்கள் தொடர்ந்து செய்துகொண்டு வருகின்றனர்.
இன்றைய நவீன காலத்தில், உயிர் காப்பதற்காக பயன்படுத்தும் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்களை திமுக, திட்டமிட்டுப் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தான போக்காகும். இச்செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. பிரதான எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி. உங்கள் கூட்டணியில் இருக்கின்ற கட்சியானாலும் சரி, எந்த ஆர்ப்பாட்டமோ, பொதுக்கூட்டமோ நடத்த முடியாது. எந்தெந்த வழிகளில் தொந்தரவு செய்ய முடியுமோ, அந்தந்த வழிகளில் செய்து, அதை கலைக்கும் வேலையை திமுக செய்யும்.
அதுபோல, அனைத்துத் துறைகளைச் சேர்ந்தவர்களும் தங்களது நியாயமான உரிமைகளுக்காகப் போராடும்போது, இந்த அரசு அனுமதி அளிப்பதுமில்லை; திட்டமிட்டு துன்புறுத்தி கைது செய்வதும் தொடர்கதையாகவே நடக்கிறது. `அதிமுக’ எனும் மாபெரும் மக்கள் பேரியக்கம், இதுபோன்ற குள்ளநரிகள் செய்யும் இடையூறுகளுக்கெல்லாம் அஞ்சாமல் எதிர்த்து நின்று, நேர்மையாக களமாடி வெல்லும் தொண்டர் படையைக் கொண்டது. தொண்டர்கள் பலமே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் சொத்து.
இதுபோன்ற அற்பத்தனமான செயல்களால் எடப்பாடி பழனிசாமியின் புகழையோ, அவருக்கு மக்களிடம் இருக்கும் வரவேற்பையோ, நன்மதிப்பையோ சீர்குலைக்க முடியாது. 2026-ல் முதல்-அமைச்சர் அரியணையில் எடப்பாடி பழனிசாமி அமருவதை தடுக்க முடியாது. அப்படி ஒரு எண்ணம் உங்களுக்கு இருந்தால் அதை சுக்குநூறாக உடைப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.