சென்னையில் பிட்புல் ரக நாய் கடித்து ஒருவர் உயிரிழப்பு
பூங்கொடி தனது வீட்டில் வளர்த்து வந்த பிட்புல் ரக நாயை நடைபயிற்சிக்காக அழைத்து சென்றார்.;
சென்னை,
சென்னை கிண்டியை அடுத்த ஜாபர்கான்பேட்டை வி.எஸ்.என். கார்டன் பகுதியில் வசித்து வருபவர் கருணாகரன் வயது (48). இவர் சமையல் வேலை செய்து வருகிறார். கருணாகரனின் வீட்டிற்கு அருகே வசித்து வருபவர் பூங்கொடி. இருவரின் வீடுகளும் அருகருகே இருக்கக்கூடிய நிலையில், இன்று மாலை 3 மணியளவில் கருணாகரன் தனது வீட்டின் அருகே அமர்ந்திருந்தார்.
இந்த நிலையில், பூங்கொடி தனது வீட்டில் வளர்த்து வந்த பிட்புல் ரக நாயை நடைபயிற்சிக்காக அழைத்து சென்றார். அப்போது வீட்டின் அருகே அமர்ந்திருந்த கருணாகரனை பிட் புல் நாய் திடீரென சரமாரியாக கடித்தது. இதில் ஆணுறுப்பு, தொடை, இடுப்பு உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமைடந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.
இருப்பினும் பிட்புல் நாய் கருணாகரனை மீண்டும் கடிக்க முயன்றது. இதனை அறிந்த பூங்கொடி அவரை காப்பாற்ற முயன்றார். அப்போது தனது உரிமையாளர் என பாராமல் பூங்கொடியையும் நாய் கடித்தது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் நாயை விரட்டி, காயமடைந்த இருவரையும் கே.கே.நகர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு கருணாகரனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் பூங்கொடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து குமரன் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை பிட்புல் நாய் கடித்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.