மதுரையில் 21-ம் தேதி நடைபெறும் தவெக மாநாட்டுக்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

எந்த ஒரு அரசியல் கட்சியும் இப்படிப்பட்ட மாநாட்டை நடத்தியதில்லை என்று சொல்லும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன;

Update:2025-08-19 18:48 IST

கோப்பு படம்

மதுரை:

வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. “வெற்றி பேரணியில் தமிழ்நாடு” என்ற கொள்கை முழக்கத்துடன், தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பரப்பத்தில் நாளை மறுநாள் (21-ந்தேதி, வியாழக்கிழமை) பிரமாண்டமாக நடைபெறுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி நடைபெறும் இந்த மாநாடு, தமிழக அரசியலில் திருப்புமுனையாக அமையும் என்ற எதிர்பார்ப்பு த.வெ.க. தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ளது.

மாநாடு குறித்து காவல்துறையினர் பல்வேறு கட்ட ஆய்வுகள் நடத்தியதையடுத்து, அவர்கள் தரப்பில் கேட்கப்பட்ட 42 கேள்விகளுக்கு த.வெ.க. சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதன்பேரில் மதுரை மாநாட்டுக்கு போலீசார் அனுமதி வழங்கினர். முதலில் 25-ந்தேதி அறிவிக்கப்பட்டிருந்த மாநாடு, விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு ஏற்பாடுகளை காரணம் காட்டி, போலீசார் கேட்டுக் கொண்டதன் பேரில் 4 நாட்களுக்கு முன்னதாக 21-ந்தேதி நடத்தப்படுகிறது.

இதுவரை எந்த ஒரு அரசியல் கட்சியும் இப்படிப்பட்ட மாநாட்டை நடத்தியதில்லை என்று சொல்லும் அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 506 ஏக்கரில் மாநாட்டு திடல், 2 பார்க்கிங் இடங்கள், 1.5 லட்சம் பேர் அமர இருக்கைகள், தொண்டர்கள் அமரும் இடங்களிலேயே சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பெண்களுக்கான “பிங்க் ரூம்” வசதி என ஒவ்வொன்றையும் மேற்பார்வையிட மேலாண்மை குழு அமைத்து த.வெ.க. அமல்படுத்தியுள்ளது.

95 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், மாநாட்டு முகப்பில் 100 அடி உயர கொடிக்கம்பம் வானுயர எழுப்பப்பட்டுள்ளது. திடமான இரும்புக் குழாய் மூலம் உருவாக்கப்பட்ட இந்தக் கம்பம், த.வெ.க. மாநாட்டின் அடையாளச் சின்னமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கம்பத்தில் 20 அடி உயரம், 30 அடி அகலத்தில் யானைகள் பொறிக்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகக் கொடி கட்டப்பட்டு, மாநாட்டின் தொடக்கமாக த.வெ.க. தலைவர் விஜய், மாநாட்டு மேடையிலிருந்து ரிமோட் மூலம் கொடியேற்றுகிறார்.

முன்னதாக, இன்று மாலை 100 அடி உயர கொடிக்கம்பம் நிலைநிறுத்தப்பட்டு, அதில் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி என். ஆனந்த் தலைமையில் சோதனை அடிப்படையில் கட்சிக் கொடி ஏற்றப்படுகிறது.மாநாடு நிறைவடைந்த பிறகும், இந்த பிரமாண்ட 100 அடி உயர கொடிக்கம்பம் அதே இடத்தில் நிரந்தரமாக இருக்கும் வகையில், அந்த நிலத்தின் உரிமையாளரிடம் வாடகை ஒப்பந்த அடிப்படையில் உரிமை கோரப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபர் 27-ந்தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டிலும், 100 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டு இன்றளவும் அங்கு பறந்துகொண்டிருக்கிறது. அந்தக் கொடிக்கம்பமும் 5 ஆண்டுகள் அடிப்படையில் நில உரிமையாளர் மணி என்பவரிடம் 225 சதுர அடி பரப்பளவில் ஒப்பந்தம் செய்து அமைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்