தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை மத்திய நிதி மந்திரி ஏற்பார் என நம்புகிறேன்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சந்தித்தார்.;
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை டெல்லியில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் திமுக எம்.பி. கனிமொழி இன்று சந்தித்தனர்.
இந்த சந்திப்பின்போது, 2025-26ம் ஆண்டு நிதியாண்டில் நபார்டு வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.4,500 கோடிக்கான நிதியையும், மீன்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் குளச்சல் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ. 350 கோடி நிதியையும் விரைந்து வழங்கிட ஒப்புதல் அளிக்குமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனிடம் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வழங்கினார்.
இந்நிலையில், குளச்சல் துறைமுக விரிவாக்கப்பணி தொடர்பாக தமிழகத்தின் நியாயமான கோரிக்கையை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஏற்று உரிய நிதியை விடுவிப்பார் என நம்புவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
குளச்சல் துறைமுக விரிவாக்கப் பணிகளைத் தொடங்கிட வேண்டும் என குமரி மாவட்ட மீனவர்கள் என்னை சந்தித்து, தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் இந்த நியாயமான கோரிக்கையை மத்திய நிதி மந்திரி ஏற்றுக்கொண்டு, விரைவில் உரிய நிதியை விடுவிப்பார் என நம்புகிறேன்
இவ்வாறு தெரிவித்துள்ளார்.