துணை ஜனாதிபதி தேர்தல்: முதல் அமைச்சர் முடிவே என் முடிவு: கமல்ஹாசன் எம்.பி
இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான் சுதர்சன ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார்.;
சென்னை,
துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் (செப்டம்பர்) 9-ந்தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. துணை ஜனாதிபதியை போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்ய பாரதீய ஜனதா கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டது. ஆனால் எதிர்க்கட்சிகள் அதை ஏற்கவில்லை. இதையடுத்து துணை ஜனாதிபதி பதவிக்கு தமிழகத்தை சேர்ந்த மராட்டிய மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணனை வேட்பாளராக பாரதீய ஜனதா கூட்டணி அறிவித்துள்ளது. அவர் நாளை (புதன்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்வார் என்று தெரிகிறது.
இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவரும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான் சுதர்சன ரெட்டி நிறுத்தப்பட்டுள்ளார். இதனால் துணை ஜனாதிபதி பதவிக்கு தேர்தல் நடைபெறுவது உறுதியாகியுள்ளது. துணை ஜனாதிபதி தேர்தலில் தமிழகத்தை சேர்ந்தவரை பாஜக நிறுத்தியுள்ளதால், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் யாரை ஆதரிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் இருந்து இன்று சென்னை திரும்பிய மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் மாநிலங்களவை எம்.பியுமான கமல்ஹாசனின் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், துணை ஜனாதிபதி தேர்தலில் முதல் அமைச்சர் முடிவுதான் எனது முடிவு” என்று கூறியுள்ளார்.