‘வைரத்தை இழந்துவிட்டோம்.. தங்கத்தை இழந்துவிடமாட்டோம்’ - மதுரையில் தவெகவினர் பேனர்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தவெக நிர்வாகிகள் மதுரைக்கு வர தொடங்கியுள்ளனர்.;

Update:2025-08-19 19:54 IST

மதுரை,

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது. இந்த நிலையில் கட்சியின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) நடக்க உள்ளது.

இதற்காக மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான ஏற்பாடு பணிகள் நடந்து வருகிறது. மாநாட்டு மேடை, மேல் இருக்கைகள், மின் விளக்குகள் அமைக்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. மாநாட்டுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இப்போதே நிர்வாகிகள் வர தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், தவெக மாநாடையொட்டி மதுரையில் பல்வேறு இடங்கள் பேனர்கள், சுவரொட்டிகள், கொடிகள் வைக்கப்பட்டுள்ளன. இதிலும் விஜயகாந்த் - விஜய் படங்களுடன் மதுரையில் தவெகவினர் பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில் விஜய் தோள் மீது விஜயகாந்த் கை போட்டிருப்பது போன்ற புகைப்படம் இடம்பிடித்திருக்கிறது. மேலும் ‘வைரத்தை இழந்துவிட்டோம்.. தங்கத்தை இழந்துவிடமாட்டோம்..’ என்ற வாசகமும் பேனரில் இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த பேனர் சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதைபோல மதுரை தவெக மாநாட்டு திடலில் அண்ணா, எம்ஜிஆரின் படங்களுடன் கூடிய விஜயின் கட் அவுட் நிறுவப்பட்டுள்ளது. “ வாகை சூடும் வரலாறு திரும்புகிறது” என்ற வாசகத்துடன் அண்ணா, எம்.ஜி.ஆரின் படங்களுடன் கூடிய கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்