திருப்பனந்தாள் காசி மடத்தின் அதிபர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் முக்தி அடைந்தார்

சைவம், தமிழ் இரண்டையும் இரண்டு கண்களாகப் போற்றி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, திருமுறைகளை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தார்;

Update:2025-08-19 22:13 IST

தஞ்சை,

தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் காசிமடம் என்னும் பெயரில் சைவம் தமிழ், கலை, இலக்கிய சமூக, சமுதாயப் பணிகளை ஆற்றிவரும், அறம் வளர்க்கும் அருள் நிலையம் உள்ளது.

இம்மடத்தின் 21 வது அதிபராக 'கயிலை மாமுனிவர்', ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள் (வயது 95) இருந்து வந்தார்.இவர் 1958 முதல் துறவேற்று, சிறிது காலம் ஸ்ரீகாசிமடத்தின் இளவரசாகப் பணிபுரிந்து, கடந்த 1972ல் ஸ்ரீகாசிமடத்தின் அதிபரானார்.

சைவம், தமிழ் இரண்டையும் இரண்டு கண்களாகப் போற்றி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக, திருமுறைகளை நாள்தோறும் பாராயணம் செய்து வந்தார். 300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமையும், பெருமையும் மிக்க காசிமடம் வரலாற்றில், மடத்தினை பல்வேறு பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய முக்கிய காரணமாக இருந்தார். மடத்தின் வளர்ச்சி கண்டு பொற்காலம் என பலரும் பாராட்டும் வகையில் மேம்பாடு அடைய செய்தார்.

இந்நிலையில், ஸ்ரீ லஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமிகள், கடந்த ஒரு மாதமாக வயது மூப்பு காரணமாக உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்ற நிலையில், திருப்பனந்தாள் மடத்தில் இன்று(19ம் தேதி) இரவு 8:00 மணிக்கு முக்தி அடைந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்