போக்குவரத்து ஊழியர்கள் கைது: திமுக அரசின் தொழிலாளர் விரோதப்போக்கு கண்டனத்திற்குரியது - டிடிவி தினகரன்
ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார் .;
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
15வது ஊதிய ஒப்பந்தத்தின் படி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்திய பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்கள் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஓய்வுபெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வூதிய பணப் பலன்கள் தற்போது வரை வழங்காமல் அலைக்கழித்துக் கொண்டிருக்கும் நிர்வாகத் திறனற்ற திமுக அரசால் வேறு வழியின்றி தொடர் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக திமுக வழங்கிய தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த 152வது தேர்தல் வாக்குறுதியான போக்குவரத்துப் பணியாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் என்ற வாக்குறுதியை ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகள் கடந்தும் நிறைவேற்றாத திமுக அரசு, ஜனநாயக ரீதியில் போராடுவோர் மீது அடக்குமுறையை ஏவியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஓட்டுநர், நடத்துநர் ஆட்சேர்ப்பு தொடங்கி அரசுப் பேருந்துகளின் பராமரிப்பு வரை போக்குவரத்துக் கழகங்களை படிப்படியாகத் தனியாருக்குத் தாரை வார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, வாழ்நாளின் பெரும்பகுதியை போக்குவரத்துத்துறையில் பணியாற்றியே கழித்த ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தைக் கூட வழங்காமல் காலம் தாழ்த்துவது அவர்களுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும்.
எனவே, போராட்டத்தில் ஈடுபட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ள போக்குவரத்து ஊழியர்களை எந்தவித நிபந்தனையுமின்றி விடுவிப்பதோடு, அவர்களுக்கான ஓய்வூதியப் பணப்பலன்களை உடனடியாக வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்துத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார் .