உலக புகைப்பட தினம்: சுற்றுப்பயணத்தின்போது தொண்டர்களை புகைப்படம் எடுத்த எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி இன்று வேலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்;
அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற எழுச்சி பயணத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் எடப்பாடி பழனிசாமி இன்று வேலூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். வேலூரில் பொதுமக்கள், கட்சித்தொண்டர்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி உரையாடினார்.
கூட்டத்தில் உரையை முடிக்கும் முன், பொதுமக்களுக்கும், புகைப்பட கலைஞர்களுக்கும் எடப்பாடி பழனிசாமி உலக புகைப்பட தின வாழ்த்துகளை தெரிவித்தார். மேலும், பிரசாரா வாகனத்தில் இருந்த புகைப்பட கலைஞரிடமிருந்து கேமராவை வாங்கிய எடப்பாடி பழனிசாம், கூடியிருந்த பொதுமக்கள், கட்சி தொண்டர்களை புகைப்படம் எடுத்தார். இதைக்கண்ட பொதுமக்களும், கட்சி தொண்டர்களும் ஆரவாரம் செய்தனர்.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
வேலூர் எழுச்சிப்பயணக் கூட்டத்திற்கு இடையே, போட்டோகிராபர் தம்பியின் கேமராவில் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தேன். உலக புகைப்பட தினமான இன்று, நம் வாழ்க்கையில் ஒன்றிணைந்து, சுகம், துக்கம், மாநாடு, பொதுக்கூட்டம், அவ்வளவு ஏன், போராட்டங்களைக் கூட அவற்றின் உணர்வுகளோடு காட்சிப்படுத்தும் புகைப்படங்களை, சரியான தருணத்தில் Capture செய்யும் கலையிற் தேர்ந்த கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.