சென்னை: ஓடும் பஸ்சில் பாலியல் சில்மிஷம் செய்த முதியவரை செருப்பால் அடித்த மாணவி

21 ஜி மாநகர பஸ்சில் 17 வயதான பாலிடெக்னிக் மாணவி ஒருவர் பயணம் செய்தார்.;

Update:2025-08-19 16:51 IST

சென்னை,

சென்னை பாரிமுனையில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற 21 ஜி மாநகர பஸ்சில் 17 வயதான பாலிடெக்னிக் மாணவி ஒருவர் பயணம் செய்தார். இந்த பஸ் கோட்டூர்புரம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மாணவியின் பின்னால் நின்று கொண்டிருந்த 60 வயது முதியவர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

மாணவியின் உடலில் கை வைத்து அவர் தகாத முறையில் நடந்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கடும் ஆவேசத்துடன் தான் அணிந்திருந்த செருப்பை கழட்டி முதியவரை சரமாரியாக தாக்கினார். இதனால் பஸ்சில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து அந்த மாணவி டிரைவரிடம் சென்று முறையிட்டதுடன் பஸ்சை கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்திற்கு ஓட்டி செல்லுமாறு அறிவுறுத்தினார். இதன்படி கோட்டூர்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் உதவியுடன் சிறுமி முதியவரை ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் முதியவரின் பெயர் மோகன் (60) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்