தூய்மைப் பணியாளர்களை அடக்கி ஒடுக்கியது ஈவு இரக்கமற்ற செயல்: டி.டி.வி. தினகரன் கண்டனம்
தூய்மைப் பணியாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
தூய்மைப் பணியாளர்களின் அறவழி போராட்டம் தீர்வு காணப்படாமலேயே தி.மு.க. அரசின் காவல்துறையின் அடக்குமுறையால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது என்று அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தூய்மைப் பணிகளைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் சென்னை மாநகராட்சியின் முடிவைக் கண்டித்தும், பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் தூய்மைப் பணியாளர்கள் கடந்த 13 நாட்களாக நடத்தி வந்த அறவழி தொடர் போராட்டம் தீர்வு காணப்படாமலேயே தி.மு.க. அரசின் காவல்துறையின் அடக்குமுறையால் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.
சென்னை மாநகரின் தூய்மையைப் பேணிக்காப்பதிலும், மக்களின் சுகாதாரத்தை உறுதிசெய்வதிலும் பெரும்பங்கு வகிக்கும் தூய்மைப் பணியாளர்களின் பணி, ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற தி.மு.க.வின் 285-வது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முன்வராதது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை ரிப்பன் மாளிகையின் வாயிலில் வாழ்வாதாரத்திற்காகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களுக்கு விநியோகிக்கப்பட்ட உணவைத் தடுத்து நிறுத்தியதோடு, மாநகராட்சியின் கழிவறைகளைக் கூட பயன்படுத்த அனுமதி மறுத்த தி.மு.க. அரசு, காவல்துறையை ஏவி அவர்களை வலுக்கட்டாயமாகக் கைது செய்திருப்பது ஆணவப்போக்கின் உச்சபட்சமாகும்.
அரசாங்கத்திற்காக மட்டுமே பணியாற்றுவோம் எனத் திட்டவட்டமாகத் தெரிவித்த தூய்மைப் பணியாளர்களைப் பேச்சுவார்த்தை என அழைத்து தனியாருக்குத்தான் பணியாற்ற வேண்டும் என அமைச்சர்களும் அரசு அதிகாரிகளும் கட்டாயப்படுத்தியிருப்பது தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது.
எனவே, காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களை எந்தவித நிபந்தனையுமின்றி உடனடியாக விடுவிப்பதோடு, தேர்தலுக்கு முன்பாக வழங்கிய 285-வது வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றிட முன்வர வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.