தஞ்சை மருத்துவக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை.. மாணவர் சஸ்பெண்ட்
மாணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி சக மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்தனர்.;
தஞ்சை மருத்துவக்கல்லூரியில் டாக்டர் அல்லாத மருத்துவம் சார்ந்த பட்டய படிப்பில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே கல்லூரி மாணவர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி, கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து மருத்துவக்கல்லூரி வளாகம் முன்பு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து கல்லூரி முதல்வர் பாலசுப்பிரமணியன், மாணவ-மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி முதல்வர், "மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவர் மீது கல்லூரியின் விசாகா கமிட்டி குழுவில் மாணவி கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை செய்த விசாகா கமிட்டி குழுவினரால் சம்பந்தப்பட்ட மாணவர் ஒரு மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இதுகுறித்து மேல் நடவடிக்கைக்கு மருத்துவக்கல்வி இயக்குனருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது" என்றார்.