பரிசோதனை முடிந்து கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ திரும்பினார் மு.க.ஸ்டாலின்
உடல்நலக்குறைவால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
சென்னை,
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்குவதால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் 'உடன்பிறப்பே வா' என்ற தலைப்பில் தொகுதிவாரியாக திமுக நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாடல் நிகழ்வையும் நடத்தி வருகிறார். தொடர்ச்சியாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் நடைபயிற்சி சென்ற அவருக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு நேற்று காலை 10.40 மணியளவில் சென்றார். அங்கு தனது உடல் பரிசோதனையை மேற்கொண்டார்.
பின்னர் அவர், அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலின், மகனும், துணை முதல்-அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினர் விரைந்து வந்தனர். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் உள்பட அமைச்சர்களும், நிர்வாகிகளும் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர்.
இதையடுத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உடல்நலம் குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் 3 நாட்கள் மருத்துவமனையில் தங்கி ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவருக்கு வேறு சில பரிசோதனைகள் மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையில் இருந்தபடி அரசு பணிகளை முதல்-அமைச்சர் தொடர்ந்து மேற்கொள்வார்' என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மருத்துவ பரிசோதனைக்காக தேனாம்பேட்டை அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவருக்கு பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து பரிசோதனை முடிந்த நிலையில், தேனாம்பேட்டை அப்பல்லோவில் இருந்து மீண்டும் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு முதல்-அமைச்சர் திரும்பினார்.
அப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் முன் இருக்கையில் அமர்ந்து சென்றார். அவருடன் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் காரில் உடனிருந்தனர். அப்பல்லோவில் 3 நாட்கள் மருத்துவர்கள் கண்காணிப்பில் ஓய்வில் இருப்பார் என கூறப்படுகிறது.