தமிழக அரசு ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை உடனடியாக இயற்ற வேண்டும்: நெல்லை முபாரக்
நெல்லையில் வாலிபர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.;
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின்குமார் ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இது மனித நேயத்திற்கு எதிரான கொடூரமான செயலாகும். சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்த கவின்குமார், தனது சொந்த ஊருக்கு வந்தபோது, நீண்டகால நண்பரான காவல் உதவி ஆய்வாளர்கள் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி தம்பதியின் மகளைச் சந்தித்து பேசியுள்ளார். பள்ளி மற்றும் கல்லூரி காலம் முதல் இருவரும் நட்புடன் பழகி வந்த நிலையில், பெண்ணின் குடும்பத்தினரிடம் இருந்து இதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதன் விளைவாக பெண்ணின் சகோதரரான மருத்துவர் சுர்ஜித், கவின்குமாரை திட்டமிட்டு அழைத்துச் சென்று மிகக் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்துள்ளார். இந்த மனிதநேயத்திற்கு எதிரான செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்து, குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வழக்கை ஆணவக் கொலை வழக்காகப் பதிவு செய்து, எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் உரிய வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்துகிறது. மேலும் இதனை தூண்டிவிட்ட காவல்துறையில் பணிபுரியும் கொலையாளி சுர்ஜித்தின் பெற்றோரையும் கைது செய்து சட்டத்தின் முன்நிறுத்தி தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் இத்தகைய ஆணவக் கொலைகள் உள்ளிட்ட கொலைச் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மாவட்டம் "கொலை நகரமாக" மாறி வருவதாக எழுந்துள்ள அச்சம் மிகவும் கவலையளிக்கிறது. கடந்த ஓராண்டில், சாதி, குடும்பப் பகை மற்றும் பிற காரணங்களால் ஏற்பட்ட கொலைகள், கொலை முயற்சிகள் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்கவை, ஆணவக் கொலைகள் மற்றும் சாதிய வன்முறைச் சம்பவங்களாகும். இத்தகைய சம்பவங்களுக்கு எதிராக தமிழக அரசும், காவல்துறையும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதே இவை தொடரக் காரணமாக உள்ளது.
இத்தகைய கொடூரச் செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, தமிழக அரசு உடனடியாக ஆணவக் கொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும். மேலும், சமூக விழிப்புணர்வு பிரச்சாரங்கள், கல்வி மற்றும் சமூக ஒற்றுமையை ஊக்குவிக்கும் திட்டங்கள் மூலம் சாதி மற்றும் ஆணவம் சார்ந்த வன்முறைகளை ஒழிக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதுடன், சமூக நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு இது அவசியமாகும்.
தமிழக அரசு இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து, ஆணவக் கொலைகள் மற்றும் வன்முறைகளைத் தடுக்க உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பாக வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.