பள்ளி கிணற்றில் மாணவர் மர்ம மரணம்: உறவினர்கள் ரெயில் மறியல் போராட்டம்
மாணவரின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.;
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மகன் முகிலன். இவர் திருப்பத்தூர் பகுதியில் உள்ள அரசு நிதி உதவிப் பெறும் மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அத்துடன் அங்குள்ள மாணவர் விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில், மாணவன் கடந்த 1-ம் தேதி காலை வகுப்புக்கு வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆசிரியர்கள் முகிலனின் பெற்றோரை தொலைபேசி வாயிலாக அழைத்து '' உங்கள் மகன் வகுப்பிற்கு வரவில்லை, அவன் உங்கள் வீட்டிற்கு வந்துள்ளானா?'' என கேட்டுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த முகிலனின் பெற்றோர், '' என் மகன் உங்கள் பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வருகிறான். அப்படி இருக்க எப்படி வீட்டிற்கு வருவான்?'' என கேள்வி எழுப்பியுள்ளனர். புகாரின் பேரில் தனிப்படை அமைத்து இரண்டு நாட்களாக சிறுவனை போலீசார் தேடி வந்த நிலையில், அதே பள்ளியில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் அவர் உயிரிழந்து கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து மாணவன் முகிலனின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பள்ளியில் உள்ள கிணற்றின் முகப்பு இரும்பு கம்பியில் பூட்டப்பட்டிருந்த நிலையில், எவ்வாறு அந்த கிணற்றில் மாணவன் விழுந்தார்? என பெற்றோர் கேள்வி எழுப்பி பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், மாணவனின் முகம் மற்றும் உடல் பாகங்களில் தீக்காயங்கள் உள்ளதாகவும், இதனால் பள்ளி நிர்வாகத்தினர் இதுவரையில் இங்கு வரவில்லையெனவும் அவர்கள் குற்றம்சாட்டி நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.
மாணவனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், பள்ளி பாதிரியார் மற்றும் நிர்வாகிகளை கைது செய்ய வேண்டும் எனக்கோரி உறவினர்கள் 2-வது நாளாக இன்று போராட்டம் நடத்தினர். உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைதுசெய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். மாணவரின் உறவினர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை இன்று வெளியானது. அதில் நீரில் மூழ்கியதே மாணவன் இறப்பிற்கு காரணம் எனவும் அவரது உடலில் சந்தேகிக்கும் வகையில் காயங்களும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் திருப்பத்தூரில் ரெயில் முன் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் ரெயில் நிலையத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது. தகவலறிந்த போலீசார் மாணவரின் உறவினர்களை ரெயில் முன் இருந்து அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.