போட்டித் தேர்வர்களின் திறன்களை மேம்படுத்த இரண்டு நாள் பயிற்சி
நேர்முக தேர்வை சிறப்பாக அணுகுவதற்கும் ஆலோசனைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், உளவியல் பகுப்பாய்வு சோதனைகளுடன் கூடிய வழிகாட்டுதல், பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகள் மற்றும் மாதிரித் தேர்வுகளை நடத்துதல், தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல் மற்றும் கல்வித்தொலைக்காட்சி வாயிலாக பல்வேறு போட்டித்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வேலைநாடுநர்களின் ஆளுமைத்திறனை மேம்படுத்துவதற்கும், நேர்முக தேர்வை சிறப்பாக அணுகுவதற்கும் தேவைப்படும் திறன்களை பெறுவதற்கு ஏதுவாக "Workshop on Pre Job Skills" என்ற தலைப்பில் உரிய அனுபவமிக்க நிபுணர்கள் / வல்லுநர்கள் (Experts) கொண்டு 09.08.2025 (சனி) மற்றும் 10.08.2025 (ஞாயிறு) ஆகிய இரு நாட்களில் (காலை 9.30 மு.ப முதல் 5.30 பி.ப வரை) பயிலரங்கமாக(Two Days Workshop) நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பயிலரங்கத்தின் இரண்டாவது நாள் (10.08.2025) பிற்பகலில் (2 p.m. - 5 p.m.) இத்துறை சார்ந்த ஒரு அலுவலர் மற்றும் இரு மனிதவள நிபுணர்களைக் கொண்டு (Two Senior HR Professionals + Officers From Employment Department) மாதிரி நேர்காணல் நடத்தப்பட உள்ளது.
இப்பயிலரங்கத்தில் நேரடியாக கலந்து கொள்ள விருப்பமுடைய வேலைநாடுநர்கள் பின்வரும் படிவத்தினை (Google form) பூர்த்தி செய்து, இப்பயிலரங்கத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் இயக்குநர் பா.விஷ்ணுசந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.