ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: தமிழக அரசு, காவல்துறை பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவு
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக தமிழக அரசு, காவல்துறை பதில் அளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.;
சென்னை,
பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 5-ம் தேதி மர்ம கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி அவரது மனைவி பொற்கொடி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், வழக்கில் காவல்துறையினர் முறையாக விசாரணை நடத்தவில்லை. முக்கியமான சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலையில் உள்ள அரசியல் தொடர்பு குறித்தும் விசாரிக்கப்படவில்லை. ஆளுங்கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், விசாரணையில் தலையிட்டுள்ளதால், குற்றப்பத்திரிகையை ரத்து செய்து, மீண்டும் விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்து இருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி வேல்முருகன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதே கோரிக்கையுடன் ஏற்கெனவே ஆம்ஸ்ட்ராங் சகோதரர் கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் தொடர்ந்த வழக்கின் விசாரணை முடிந்து தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், இந்த மனுவை ஏற்கக் கூடாது என அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை வருகிற 20-ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.