தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும் - டி.டி.வி. தினகரன்
தூய்மைப் பணியாளர்களின் பணிநிரந்தர கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.;
கோப்புப்படம்
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு மண்டலங்களுக்கான தூய்மைப் பணிகள் ஏற்கனவே தனியாருக்கு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மீதமிருக்கும் தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர் உள்ளிட்ட மண்டலங்களிலும் தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதைக் கண்டித்து சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
முறையான ஊதியம், பணி நேரம், விடுமுறை உள்ளிட்டவை கிடைக்காமலும், அரசு நிர்ணயித்த ஊதியத்தை முழுமையாகப் பெற முடியாமலும் தூய்மைப் பணியாளர்கள் ஏற்கனவே தவித்து வரும் நிலையில், தற்போது, தூய்மைப் பணியை முழுமையாகத் தனியார் வசம் ஒப்படைப்பதால் தங்களுக்கான பணி பாதுகாப்பும், ஊதியமும் கேள்விக்குறியாகியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தேர்தலுக்கு முன்பாக வழங்கிய தேர்தல் அறிக்கையில் 281 முதல் 285 வரையில் வாரம் ஒரு நாள் விடுமுறை, பணி நிரந்தரம், ஊதியம், ஓய்வூதியம் போன்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என வாக்குறுதி வழங்கிய தி.மு.க., தற்போது தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்ப்பது ஒட்டுமொத்த தூய்மைப் பணியாளர்களுக்கும் இழைக்கும் அநீதியாகும்.
வருடத்திற்கு ஒருமுறை அருகில் அமர்ந்து உணவு அருந்துவது போலப் புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் கண்களுக்கு, வாழ்வாதாரத்திற்காக வருடந்தோறும் நடைபெறும் தங்களின் போராட்டம் தெரியவில்லையா எனத் தூய்மைப் பணியாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
எனவே, சென்னை மாநகராட்சி மட்டுமல்ல தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் தூய்மைப் பணியைத் தனியாருக்குத் தாரைவார்க்கும் முடிவை உடனடியாக கைவிடுவதோடு, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப்பணியாளர்களை அழைத்துப் பேசி அவர்களின் பணிநிரந்தரக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.