பி.எட். மாணவர் சேர்க்கை: இணைய வழியிலேயே கல்லூரியை தேர்வு செய்யலாம் - அமைச்சர் தகவல்

வருகிற 9-ந்தேதி வரை இணைய வழியில் மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2025-08-04 17:40 IST

கோப்புப்படம் 

2025-26ம் கல்வியாண்டிற்கான அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரி (பி.எட்) மாணாக்கர் சேர்க்கை விருப்பப்பாடங்கள் மற்றும் கல்லூரியை இணைய வழியில் மாணவர்கள் தேர்வு செய்யலாம் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது:-

கடந்த ஆண்டுகளில் பி.எட். மாணாக்கர் சேர்க்கை நேரடி கலந்தாய்வின் மூலம் நடைபெற்று வந்தது. இதனால் வெளி ஊர்களில் இருந்து மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களுடன் சென்னைக்கு வந்து கலந்தாய்வில் கலந்து கொள்ளும் நிலை நேரிட்டது. இந்த சிரமங்களைப் போக்க முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2025-2026ம் கல்வியாண்டிற்கான தமிழ்நாடு பி.எட். மாணாக்கர் சேர்க்கை இணைய வழியில் நடத்திட முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி, விண்ணப்பங்கள் 20.06.2025 முதல் 21.07.2025 வரை இணைய வழியில் பெறப்பட்டன. 557 ஆண்கள் 2,983 பெண்கள் மற்றும் 5 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 3,545 நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பின்னர் 31.07.2025 அன்று தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 900 இடங்களும், 14 அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 1,140 இடங்கள் என 21 கல்வியியல் கல்லூரிகளில் 2,040 இடங்கள் உள்ளன.

இணைய வழியில் 04.08.2025 பிற்பகல் 1 மணி முதல் 09.08.2025 மாலை 5 மணி வரை மாணவர்கள் தாங்கள் விரும்பும் கல்லூரியைத் தேர்வு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தங்கள் உள்நுழைவு ID மூலம் www.lwiase.ac.in என்ற இணையதளம் வாயிலாக தங்கள் விருப்ப கல்லூரியைத் தேர்வு செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்