தஞ்சாவூர்: வயலுக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழப்பு

தஞ்சாவூரில் வயலுக்கு சென்றபோது மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2025-08-04 19:05 IST

தஞ்சையை அடுத்துள்ள கள்ளப்பெரம்பூர் இரண்டாம் சேத்தியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (53 வயது). இவருடைய மனைவி ராமாயி (46 வயது). விவசாயியான சுப்பிரமணியனுக்கு சொந்தமான வயல் கள்ளப்பெரம்பூர் ஓடவாய்க்கால் அருகே உள்ளது. இந்த நிலையில் நேற்று மதியம் சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி ராமாயி இருவரும் வயலுக்கு சென்றனர்.

சுப்பிரமணியன் வயலுக்கு அருகில் உள்ள பகுதியில் அமைக்கப்பட்டிருந்த இரும்பு வேலி மீது மின்கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதனை கவனிக்காமல் சுப்பிரமணியனும், ராமாயியும் இரும்புவேலியை தொட்டுள்ளனர். அவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் வயலுக்குள் தூக்கி வீசப்பட்டனர். இதில் சுப்பிரமணியன், ராமாயி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சுப்பிரமணியன் வயலுக்கு அருகில் நாற்றங்கால் அமைத்திருந்த மற்றொரு விவசாயி ஆடு, மாடுகள் மேயாமல் இருக்க இரும்பு வேலி அமைத்து வைத்திருந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு கள்ளப்பெரம்பூர் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தபோது மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து இரும்பு வேலி மீது விழுந்திருக்கலாம் என்றும் அதனை கவனிக்காமல் தம்பதியினர் இரும்பு கம்பியை தொட்ட போது மின்சாரம் தாக்கி உயிரிழந்து இருக்கலாம் என்று அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுப்பிரமணியன்-ராமாயி தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மின்சாரம் தாக்கி தம்பதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்