பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நாளை உண்ணாவிரதம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் நாளை உண்ணாவிரதம் போராட்டம் நடத்துகின்றனர்.;
சென்னை,
டாஸ்மாக் ஊழியர்கள் மாநில சம்மேளன கூட்டம் அதன் தலைவர் முருகன் தலைமையில் கடந்த மாதம் 7-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த நிலையில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் சென்னையில் நாளை உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர். இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழக அரசின் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கையின்போது, டாஸ்மாக் ஊழியர்களுக்கு அறிவித்த ஊதிய உயர்வு ரூ.2,000 அனைவருக்கும் முழுமையாக வழங்கிட வேண்டும். ஊதிய உயர்வு குறித்து டாஸ்மாக் நிறுவனத்தின் 218-வது நிர்வாகக்குழு கூட்ட தீர்மானத்தை ரத்து செய்து ரூ.2,000 சம்பள உயர்வாக அறிவிக்க வேண்டும்.
விசாரணை ஏதுமின்றி தன்னிச்சையாக தொழிலாளிகளை குற்றவாளியாக்கி இடமாறுதல், தற்காலிக பணி நீக்கம், அபராதம் என ஒரு தவறுக்கு மூன்று தண்டனை வழங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும், மின்னணு இயந்திரம் மூலம் விற்பனைக்கான இலக்கை நிர்மானிப்பதை நிறுத்த வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகில் டாஸ்மாக் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.