நெல்லை கவின் கொலை செய்யப்பட்ட வீடியோ வெளியானதா? தமிழக அரசு விளக்கம்
கவின் கொலை செய்யப்பட்டதை தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது;
சென்னை
நெல்லையில் காதல் விவகாரத்தில் ஐ.டி. ஊழியர் கவின் வெட்டி படுகொலை செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் தம்பதியான சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோரின் மகன் சுர்ஜித் கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் கவினின் காதலி சுபாஷினியிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து விசாரணைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கவின் கொலை செய்யப்பட்டதை தொடர்புபடுத்தி சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதுதொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுபற்றி தமிழக அரசின் சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "இது தமிழ்நாடு அல்ல. இந்த வீடியோவில் உள்ள சம்பவம் கடந்த ஆண்டு ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் நடைபெற்றது. இந்த வீடியோவுக்கும், நெல்லையில் நடைபெற்ற கொலை சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. தவறான தகவலை பரப்பவேண்டாம்" என்று கூறப்பட்டுள்ளது.