சாலை ஆய்வாளர்கள் பணி நியமனம்: அரசுக்கு நன்றியும், பாராட்டும் - முத்தரசன்
இன்று தமிழ்நாடு அரசு, பணியாளர் தேர்வாணையம் அறிவித்த 957 பேர்களுக்கும் சாலை ஆய்வாளர் பணி நியமனம் வழங்கியுள்ளது.;
சென்னை,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித் துறையில் இருந்து வந்த சாலை ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி, அதன் முடிவுகளை 2024 நவம்பர் 27 ஆம் தேதி வெளியிட்டது. தேர்வில் தேர்வு செய்யப்பட்ட 957 பேர் பட்டியலை தேர்வாணையம் வெளியிட்டது.
தேர்வாணையம் அறிவித்த 957 பேர்களின் பணி நியமனத்தை எதிர்த்து, பட்டயப்படிப்பு மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் உயர்நீதி மன்றத்தில் முறையீடு செய்து தடுத்து நிறுத்தினர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை தேர்வாணையத்தின் முடிவை உறுதி செய்து, எதிர் முறையீட்டை ரத்து செய்தது.
உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். எனினும் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை ஏதும் இல்லாத நிலையில், தமிழ்நாடு அரசு சாலை ஆய்வாளர் பணிக்கு தேர்வான பணியாளர்கள் அனைவருக்கும் பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பிலும் அரசுக்கு முறையீடு செய்யப்பட்டது.
இன்று (04.08.2025) தமிழ்நாடு அரசு, பணியாளர் தேர்வாணையம் அறிவித்த 957 பேர்களுக்கும் சாலை ஆய்வாளர் பணி நியமனம் வழங்கியுள்ளது. பணி நியமனம் செய்த தமிழ்நாடு அரசுக்கும், ஊரக வளர்ச்சித் துறைக்கும் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.