ஆடி அமாவாசை; ராமேஸ்வரத்திற்கு சிறப்பு பஸ்கள்; அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை
24-ந்தேதி அன்று ஆடி அமாவாசை வருவதால் ராமேசுவரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.;
சென்னை,
தமிழகம் மற்றும் பெங்களூரிலிருந்தும் பொதுமக்கள் ஆடி அமாவாசை அன்று புண்ணிய ஸ்தலமான ராமேசுவரத்திற்கு சென்று தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் திதி வழங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதன்படி வருகிற 24-ந்தேதி அன்று ஆடி அமாவாசை வருவதால் ராமேசுவரத்திற்கு அதிகளவில் மக்கள் பயணிப்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதனடிப்படையில் வருகிற நாளை (புதன்கிழமை) அன்று சென்னை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து ராமேசுவரத்திற்கும் மற்றும் வருகிற 24-ந்தேதி ராமேசுவரத்திலிருந்து சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
www.tnstc.in மற்றும் tnstc official app மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இச்சிறப்பு பஸ்கள் இயக்கத்தை கண்காணிக்க குறிப்பிட்ட பஸ் நிலையங்களில் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தி பயணத்தை மேற்கொள்ளலாம் என்று அரசு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.