உடல்நலக்குறைவு: முதல்-அமைச்சரின் திருப்பூர், கோவை கள ஆய்வு பயணம் ஒத்திவைப்பு
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள முதல்-அமைச்சரை ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.;
சென்னை,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) கள ஆய்வு பணியை மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டிருந்தார். இந்த நிலையில் திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள அவரை டாக்டர்கள் ஓய்வெடுக்க அறிவுறுத்தி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து அவர் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. சென்னை கவர்னர் மாளிகையில் நேற்று நடைபெற்ற சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மணிந்திர மோகன் ஸ்ரீவத்சவா பதவியேற்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வதாக இருந்தது.
ஆனால் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால், இந்த விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அனுப்பி வைத்தார்.