ஈரோடு: காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி
வேலை முடிந்து வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தபோது காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.;
ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கடம்பூர் அருகே பவளக்குட்டை கீழூரை மேட்டான்காடு தொட்டி என்ற இடத்தில் நேற்று காலை சிலர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சாலையோரம் ஆண் ஒருவர் ரத்த காயத்துடன் பிணமாக கிடந்தார். உடனே இதுகுறித்து கடம்பூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் பிணமாக கிடந்தவர் 'கடம்பூர் அருகே உள்ள பவளக்குட்டை கீழூரை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 58). விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராஜம்மாள். இவருக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் வழக்கம்போல் சின்னசாமி நேற்று முன்தினம் காலை கூலி வேலைக்கு சென்றுவிட்டு இரவு வீடு திரும்பி கொண்டிருந்தபோது காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.' என்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடம்பூர் வனத்துறையினர் சின்னசாமியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறி ஈமச்சடங்குக்காக ரூ.50 ஆயிரம் நிதி உதவி வழங்கினர். அதைத்தொடர்ந்து அரசு சார்பில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர்.