தலையை துண்டித்து விவசாயி கொல்லப்பட்ட சம்பவம்: வாலிபர் கைது
கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
சிவகங்கை,
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியை அடுத்த நாட்டாகுடியை சேர்ந்தவர் ேசானைமுத்து (வயது 63). விவசாயி. இவர் மதுரை தல்லாகுளத்தில் வசித்து வந்தார். இவர் நாட்டகுடி பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிவதற்காக இங்கு வந்து தங்கி உள்ளார். நேற்று முன்தினம் மதியம் இவரும், பாண்டி (64) என்பவரும் நட்டாக்குடியில் அவர்கள் தங்கி உள்ள வீட்டின் வாசலில் அமர்ந்து இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் சோனைமுத்துவின் தலையை வாளால் துண்டித்தனர். இதை தடுக்க முயன்ற பாண்டியையும் அவர்கள் வெட்டினார்கள். இந்த சம்பவத்தில் சோனைமுத்து அதே இடத்தில் இறந்தார்.பின்னர் அவர்கள் 3 பேரும் அவரது தலையை வெட்டி எடுத்து கொண்டு உடலை மட்டும் அங்கேயே போட்டுவிட்டு தப்பித்து சென்று விட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத், திருப்பாச்சேத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர், அங்கு சோனைமுத்துவின் உடலை மீட்டு சிவகங்கை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த நிலையில் சோனைமுத்துவின் தலையை தூக்கிச் சென்ற 3 பேரும் சிவகங்கை சூரக்குளம் ரோட்டில் உள்ள பொட்டலில் இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். சுமார் 5 மணி வரை தேடுதல் வேட்டைக்கு பின்பு சிவகங்கையில் உள்ள ஒரு கண்மாய் பகுதியில் இருந்து சோனைமுத்துவின் தலையை போலீசார் கைப்பற்றினார்கள். பின்னர் அவர் உடலுடன் தலையை சேர்த்து பிரேத பரிசோதனை செய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு பார்த்திபன் உத்தரவின் பேரில் திருப்பாச்சேத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக படமாற்றூரை அடுத்த பி.வேலாங்குளத்தை சேர்ந்த சிங்கமுத்து(22) என்பவரை திருப்பாச்சேத்தி போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். விவசாயி கொலையில் வேறு யாராவது சம்பந்தப்பட்டு இருக்கிறார்களா? கொலைக்கான காரணம் குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.