"அவர் வரவில்லை என்றாலும் மனம் இங்குதான் இருக்கும் " - துர்கா ஸ்டாலின்
எனது கணவர் போல் நானும் உங்களுடன் ஒருவராக இருக்கவே ஆசைப்படுகிறேன் என்று துர்கா ஸ்டாலின் பேசினார்.;
சென்னை,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் மற்றும் குடும்ப வாழ்க்கையை அவரது மனைவி துர்கா ஸ்டாலின் 'அவரும், நானும்' என்ற தலைப்பில் வார இதழ் ஒன்றில் தொடராக எழுதினார். இதை அவர், புத்தகமாக வெளியிட விரும்பினார். அதன்படி 'அவரும், நானும்' புத்தகத்தின் முதல் பாகம் கடந்த 2018-ம் ஆண்டு பிப்ரவரி 27-ந்தேதி அன்று வெளியிடப்பட்டது.இந்த புத்தகத்தின் ' 2-ம் பாகம் புத்தக வெளியீடு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் துர்கா ஸ்டாலின் ஏற்புரையாற்றி பேசியதாவது:-
முதல்-அமைச்சராகவும், கட்சியின் தலைவராகவும் பல்வேறு பணிகள் இருந்தாலும், ஒரு கணவராக எனக்கு நேரம் ஒதுக்கியதோடு மட்டுமல்லாது, தனக்கு கிடைத்த நேரத்தில் இந்த நூலை முழுவதும் பிடித்து, எனக்கு சில ஆலோசனைகளையும் வழங்கி, இந்த நூலுக்கு அன்பு உரையும் எழுதி கொடுத்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு அவரால் வரமுடியவில்லை என்றாலும், மனம் முழுவதும் இங்குதான் இருக்கும். நேரலையில் முழு நிகழ்வை பார்த்துக் கொண்டிருக்கும் எனது கணவருக்கு முதல் நன்றி.
சொல்லபோனால்,' கண்டிப்பாக நீ இந்த நிகழ்ச்சிக்கு சென்று நல்லபடியாக நடத்திவிட்டு வா' என்று என்னை வாழ்த்தி அனுப்பியதும் அவர்தான். 2010-ல் என்னுடைய முதல் தொடர் வந்தபோது, அதன் தலைப்பு தளபதியும், நானும்தான் என்று இருந்தது. என்னுடைய கணவர்தான்,' அவரும், நானும்' என்று மாற்றினார்.எப்போதும் என்னுடைய கணவர் உங்களில் ஒருவன் நான் என்று சொல்லுவார். நூலும் அதே தலைப்பில் வெளியிட்டார். அதேபோல், நானும் உங்களில் ஒருத்தியாக இருக்கவே எப்போதும் ஆசைப்படுகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.