பரபரப்பாகும் அரசியல் களம்.. சீமான், விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு
அதிமுக-பாஜக கூட்டணியில் தவெக இணைய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.;
சென்னை,
"அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை" என்று சொல்வார்கள்.
மக்கள் பிரச்சினைகளில் ஆளுங்கட்சியுடன் மோதும் அரசியல் கட்சிகள் கூட தேர்தல் நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவர்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்வார்கள். இதற்கு கடந்த கால தேர்தல்களில் அமைந்த கூட்டணிகளே சாட்சி. தமிழ்நாட்டில் இன்றைக்கு தி.மு.க.வும், பா.ஜ.க.வும் எதிரும் புதிருமான கட்சி.
ஆனால், 2001-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் இந்த 2 கட்சிகளும் கூட்டணி அமைத்திருந்தன. அதேபோல், இன்றைக்கு தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டு கட்சிகள் அப்போது அ.தி.மு.க. கூட்டணியில் இருந்தன. பா.ம.க.வும், த.மா.கா.வும் அதே கூட்டணியில்தான் அங்கம் வகித்தன.
மும்முனை போட்டி நிலவிய இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2006-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நிலைமை அப்படியே மாறியது. அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., இரு கம்யூனிஸ்டு கட்சிகள் அங்கம் வகித்தன.
புதிதாக உதயமான தே.மு.தி.க.வும், பா.ஜ.க.வும் தனித்து போட்டியிட்டன. 4 முனைப்போட்டி நிலவிய இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. 2011-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் நிலைமை மாறியது. அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க., இரு கம்யூனிஸ்டுகள், மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், பா.ம.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. பா.ஜ.க. தனித்து களம் கண்டது. மும்முனை போட்டி நிலவிய இந்த தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2010-ம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கிய சீமான், இந்த தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
2016-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நிலைமை வித்தியாசமாக இருந்தது. அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டது. தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருந்தது. தே.மு.தி.க. தலைமையில் ம.தி.மு.க., இரு கம்யூனிஸ்டு கட்சிகள், த.மா.கா., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை இணைந்து மக்கள் நல கூட்டணியை உருவாக்கின. பா.ம.க., பா.ஜ.க., சீமானின் நாம் தமிழர் கட்சிகள் தனித்து போட்டியிட்டன. 6 முனைப்போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது.
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், இரு கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., த.மா.கா. உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்தன. அ.ம.மு.க., மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகள் தனித்தனி கூட்டணியை அமைத்தன. சீமான் தனித்து போட்டியிட்டார். 5 முனைப்போட்டி நிலவிய இந்த தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது.
இப்படி, தேர்தலுக்கு தேர்தல் கூட்டணிகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. அந்த வகையில், தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை திரைக்கு பின்னும், முன்னும் தொடங்கி உள்ளன.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க. விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி கடந்த 2017-ம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. இருந்தாலும் தற்போது தி.மு.க.வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குரல் ஒலிப்பது, ஆட்சியில் பங்கு என்று விடுதலை சிறுத்தைகள் முழக்கமிடுவது, கட்சியின் அங்கீகாரம் பெற கூடுதல் இடங்கள் வேண்டும் என்று ம.தி.மு.க. குரல் எழுப்புவது போன்ற எதிர்ப்புகளும் தி.மு.க. கூட்டணியில் எழுந்துள்ளன. தற்போது கூடுதலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
அதேபோல் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி. மு.க. இணைந்திருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்தகால தேர்தலை போலவே தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருக்கிறது. அந்த கட்சியை கூட்டணிக்குள் இழுக்க ஏற்பட்ட முயற்சி தோல்வி அடைந்து விட்டன.
நடிகர் விஜய்யின் த.வெ.க. தேர்தல் களத்திற்கு புதிது. தி.மு.க.-பா.ஜனதாவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கடந்த செயற்குழு கூட்டத்தில் விஜய் திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அப்படியென்றால் அ.தி.மு.க.வுடன் விஜய் கட்சி கூட்டணி அமைக்குமா? என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதால், அதிமுகவுடன், தவெக கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பும் இல்லை என்று தெரிகிறது.
ஆனால் விஜய்தான் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்று த.வெ.க. தெளிவாக கூறியுள்ளதால் அவர்கள் தலைமையில் புதிய அணி உருவாகத்தான் வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த கட்சி தங்களது தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகிறது .பா.ம.க.வில் ஏற்பட்டுள்ள பிரச்சினை முடிவுக்கு வந்த பிறகுதான் அந்த கட்சி எந்த கூட்டணியில் இடம் பெறப்போகிறது என்பது தெளிவாக தெரியும்.
தே.மு.தி.க. தனது கூட்டணி முடிவை அடுத்த ஆண்டு அறிவிப்பதாக சொல்லி இருக்கிறது. தேர்தல் கூட்டணி கணக்குகள் ஒருபுறம் பரபரத்து கொண்டு இருந்தாலும், ஆளுங்கட்சியான தி.மு.க. தேர்தல் பணியை முதலில் தொடங்கிவிட்டது.
'200 தொகுதிகளில் வெல்வோம்' என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்து, தேர்தல் பணியை துவங்கி உள்ளார். இதேபோல் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதிவாரியாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் விஜய்யின் அறிவிப்பு, சீமானின் தனித்து போட்டி என்ற விடாப்படி கொள்கை ஆகியவற்றால் 4 முனை போட்டி நிலவுவது உறுதியாகி இருக்கிறது.
இந்த சூழலில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கூட்டணி எப்படி அமையப் போகிறது? என்பது குறித்த வெளியாகும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கூட்டணியில் சேர சீமான் மற்றும் விஜய்-க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
2026-ல்தமிழக மக்கள் ஒற்றைக் கட்சி ஆட்சியை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். திமுகவை தோற்கடிக்க அனைத்து ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளும் அதிமுகவுடன் கைகோர்க்க வேண்டும்
ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என்ற கருத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பொருந்தும். இதுவரை தவெகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மக்களின் துன்பங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ளவில்லை.
ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்பதை பாஜக தலைமைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கூறவில்லை. அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என திமுக கூட்டணி கட்சிகள் கூறி வந்ததற்கு பதிலளிக்கவே அப்படி பேசினேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தனது கட்சியும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கங்களான அதிமுகவும் தமிழ்நாட்டில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மீண்டும் மீண்டும் கூறி வரும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் மக்கள் "ஒற்றைக் கட்சி ஆட்சியை" மட்டுமே எதிர்பார்க்கிறார்கள் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே, இரு கட்சிகளின் கூட்டணியை உடைக்கும் முயற்சிகள் பலனளிக்காது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.