பட்டாசு ஆலைகளை தொடர்ந்து கண்காணித்து தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் - ஜி.கே.வாசன்

தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை வழங்க வேண்டும் என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.;

Update:2025-07-22 07:00 IST

கோப்புப்படம்

சென்னை,

த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

சிவகாசி அருகே ஆண்டியாபுரத்தில் தனியார் பட்ட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது. மேலும் 3 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதும் வேதனைக்குரியது.

பட்டாசு தயாரிக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தால் உயிர் சேதமும், காயமடைந்ததும் நிகழ்ந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்று கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வெடி விபத்துகள் ஏற்படாமல் இருக்க தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் முன்னெச்சரிக்கையாக எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

குறிப்பாக ஆலை நிர்வாகம் பட்டாசு தயாரிப்பில் தொழிலாளர்களை வேலைக்கு பயன்படுத்தும் போது பாதுகாப்பு இருப்பதை உறுதி செய்த பின்னரே வேலையில் ஈடுபடுத்த வேண்டும். அதே போல தமிழக அரசும் பட்டாசு ஆலைகளில் தொழிலாளர்களின் பணியில் பாதுகாப்பு இருக்க, விபத்துகள் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை ஆலை நிர்வாகம் கடைபிடிக்கிறதா என்பதை தொடர் ஆய்வின் மூலம் உறுதி செய்திருக்க வேண்டும்.

அனுமதி அளிக்கப்பட்டதா அப்படி அனுமதிக்கப்பட்டிருந்தால் விதிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்றால் அதெல்லாம் கேள்விக்குறியே. அதை சரியாக, முறையாக ஆய்வு செய்யாத அரசாக தமிழக தி.மு.க. அரசு ஆட்சி புரிகிறது.

தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைத் தொழிலும், தொழிலாளர்களின் நலனும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அப்படி இருந்தும் அவ்வப்போது பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதமும், காயமடைவதும் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இதற்கெல்லாம் பொறுப்பு பட்டாசு ஆலைகளின் உரிமையாளர்கள் மட்டுமல்ல கண்டும் காணாமல் இருக்கும் தமிழக அரசும் தான்.

தமிழக அரசே தற்போது தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணத்தொகை வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு உதவித்தொகை வழங்கவும் வேண்டும்.

மேலும் தமிழக அரசு இனிமேலும் தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடி விபத்துகள் ஏற்படாமல் இருக்க, தொழிலாளர்களின் பாதுகாப்பான தொழிலுக்கு உத்தரவாதம் கொடுக்க தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆய்வு மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகின்றேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Full View

Tags:    

மேலும் செய்திகள்