17 வயதில் துளிர்விட்ட ஆசை.. உல்லாச வலையில் சிக்கிய பல ஆண்கள் - இளம்பெண் அளித்த பரபரப்பு வாக்குமூலம்
தீபிகா தான் பழகும் ஒவ்வொரு ஆணிடமும் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லியே பழகியுள்ளராம்.;
சென்னை,
சென்னை ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்தவர் மணி (வயது 47). பிரபல தொழில் அதிபரான இவர், சமீபத்தில் சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கினார். அவருடன் தோழி தீபிகாவும் (24) தங்கியிருந்தார். அப்போது இருவரும் ஒன்றாக மது அருந்தியதாக தெரிகிறது. போதை மயக்கத்தில் மணி தூங்கி விட்டார். காலையில் எழுந்து பார்த்தபோது மணி கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலி திருட்டுப்போய் இருந்தது. தோழி தீபிகாவை காணவில்லை.
இதுதொடர்பாக மணி, தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். இதுதொடர்பாக தேனாம்பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சபரிதாசன், சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் ஆகியோரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். நகையை திருடியதாக தீபிகா கைது செய்யப்பட்டார்.
தீபிகாவிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவருடன் நெருக்கமாக பழகி வந்த காதலன் சதீஷ்குமார் (24) என்பவர் உதவியுடன் திருடிய நகையை தீபிகா ரூ.7 லட்சத்துக்கு விற்றுள்ளார். நகையை விற்ற பணத்தில் காதலன் சதீஷ்குமாருக்கு ஒரு மோட்டார் சைக்கிள் வாங்கி கொடுத்தார். மீதியுள்ள பணத்தை தீபிகாவும், காதலன் சதீஷ்குமாரும் வைத்துள்ளனர். மீதி பணமும், மோட்டார் சைக்கிளும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இதற்கிடையில் விற்பனை செய்த நகையை மகேஸ் என்பவர் வாங்கியது கண்டறியப்பட்டது. அந்த நகையை உருக்கிவிட்டதாக தீபிகா போலீசாரிடம் தவறான தகவலை சொன்னார். ஆனால் போலீசார் மகேசை பிடித்து விசாரித்தனர். அவர் நகையை உருக்காமல் அப்படியே வைத்திருந்தார். அந்த நகையும் மீட்கப்பட்டது. திருட்டு நகையை விற்க உதவியதாக தீபிகாவின் காதலன் சதீஷ்குமாரும் கைது செய்யப்பட்டார்.
தீபிகா போலீசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-
நான் எனது பெற்றோரை பிரிந்து தற்போது தனியாக வாழ்கிறேன். எனக்கு 17 வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. எனது கணவர் பிரிந்துசென்று விட்டார். 4 வயதில் ஒரு மகன் இருக்கிறான். எனக்கு ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசை 17 வயதிலேயே துளிர் விட்டது. எனக்கு நிறைய ஆண் நண்பர்கள் உள்ளனர். அவர்கள் எனது ஆசையை பூர்த்தி செய்து வைப்பார்கள். இந்தநிலையில், தொழில் அதிபர் மணியை ஓட்டலில்தான் முதன் முதலில் சந்தித்தேன். இருவரும் ஓட்டலில் அறை எடுத்து தங்கி மது அருந்தினோம். இருவரும் உல்லாசமாக இருந்தோம்.
மதுமயக்கத்தில் மணி தூங்கிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தங்க சங்கிலியை திருடிச் சென்றுவிட்டேன். என்னுடைய ஆண் நண்பர்களை மயக்கி பலரிடம் பணம் பறித்துள்ளேன். ஆனால் யாரும் புகார்கொடுக்கவில்லை. முதல்முறையாக மாட்டிக்கொண்டேன்.
இவ்வாறு தீபிகா வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கைதான தீபிகாவும், அவரது காதலன் சதீஷ்குமாரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். தீபிகா தான் பழகும் ஒவ்வொரு ஆணிடமும் தனக்கு திருமணம் ஆகவில்லை என்று பொய் சொல்லியே பழகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.