திருமாவளவனால் தி.மு.க-விடம் பொதுத்தொகுதியை கேட்க முடியுமா? சீமான் கேள்வி
திமுகவிடமிருந்து ஒரு பொதுத்தொகுதியை கேட்டுப்பெற திருமாவளவன் என்ன பாடுபடுகிறார்.;
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் தமிழர்களால் வாக்கு செலுத்தி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளது. இதில் எங்கிருந்து திராவிட மாடல் ஆட்சி வருகிறது. தமிழர் அறம் சார்ந்த ஆட்சி என திமுகவால் சொல்ல முடியவில்லை. திராவிடம் என்பது தமிழ்ச்சொல் அல்ல. அது சமஸ்கிருதத்திலிருந்து வந்தது.
பிராமண எதிர்ப்பை காட்டி திராவிட இருப்பை காட்டியவர்கள் திமுக. இதே வீரமணி, சமூக நீதி காத்த வீராங்கனை என்று சொல்லி ஜெயலலிதாவுக்கு செங்கோல் கொடுத்தாரே! பெரியார், அண்ணா வழியில் வந்ததாக சொல்லிக் கொள்ளும் நீங்கள் செய்யாததை ஜெயலலிதா செய்தார். திமுகவில் ஆ.ராசா வெற்றி பெற்ற பெரம்பலூர் தொகுதி பொதுத்தொகுதியானபோது அங்கு ஆ.ராசாவை நிறுத்தாமல் நீலகிரி தனித்தொகுதியில் போட்டியிடுமாறு கருணாநிதி செய்தார். ஆனால் ஜெயலலிதா, திருச்சி பொதுத்தொகுதியில் தலித் எழில்மலையை நிறுத்தி வெற்றி பெறச் செய்தார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த தனபாலை சபாநாயகராக்கினார், உணவுத்துறை அமைச்சராக்கினார். இதுதானே மாறுதல். இதைக்கூட திமுக செய்யவில்லை. திமுகவிடமிருந்து ஒரு பொதுத்தொகுதியை கேட்டுப்பெற திருமாவளவன் என்ன பாடுபடுகிறார். பொதுக்குளத்தில் நீங்கள் எல்லாம் குளிக்கக்கூடாது என்பதுபோல் பொதுத்தொகுதிக்கு நீங்கள் எல்லாம் ஆசைப்படக்கூடாது என்று திமுக சொன்னது பதிவாகியுள்ளது. ” இவ்வாறு அவர் கூறினார்.