திருநெல்வேலியில் பட்டறைகளில் 9 அரிவாள்கள் பறிமுதல்: 3 பேர் மீது காவல்துறை நடவடிக்கை

நெல்லையில் சட்டவிரோதமாக ஆயுதங்களை தயார் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update:2025-08-10 07:53 IST

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையின் சார்பில், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கட்டுப்படுத்த தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சரித்திர பதிவேடு உடைய குற்றவாளிகளின் நடவடிக்கைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது. இது போன்ற குற்றவாளிகள் தடை செய்யப்பட்ட அபாயகரமான ஆயுதங்களை பயன்படுத்தி குற்ற செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தியும் வருகின்றனர். இதனை தடுப்பதற்காக அரிவாள்கள் தயார் செய்யும் பட்டறைகள் தீவிரமாக கண்காணிக்கபட்டு வரப்படுகிறது.

பட்டறைகளில் மரங்கள் வெட்டுவதற்காகவும், விவசாய பயன்பாட்டிற்காகவும் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள்/உபகரணங்கள் தவிர்த்து, அபாயகரமான அரிவாள் மற்றும் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்கள் தயாரிக்கக் கூடாது என இரும்பு பட்டறை உரிமையாளர்களிடம் காவல்துறையின் மூலம் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவினை மீறி இது போன்ற தீங்கு விளைவிக்கக் கூடிய செயல்களுக்கு பயன்படுத்தும் ஆயுதங்களை தயார் செய்யும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, மேல அரியகுளத்தில், சுடலையாண்டி (வயது 72), சேர்மவேல்(60), ராமசுப்பிரமணியன்(25) ஆகியோரது பட்டறைகளில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட அபாயகரமான ஆயுதங்களான 9 அரிவாள்கள் கைப்பற்றப்பட்டு, சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் இது போன்ற சட்டவிரோதமான செயல்களுக்கு பயன்படுத்தும் வகையிலான ஆயுதங்களை தயார் செய்யும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்