சேலம்: ரெயிலில் கடத்தி வரப்பட்ட 28 கிலோ கஞ்சா பறிமுதல்
கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;
சேலம்,
வடமாநிலத்தில் ரெயில் மூலம் சேலம் வழியாக அடிக்கடி கஞ்சா கடத்தி வரப்படுகிறது. இதையடுத்து கஞ்சா கடத்தலை தடுக்கவும், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்யவும் ரெயில்வே மற்றும் மாவட்ட போலீசார் பல்வேறு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் ரெயில்வே போலீசார் நேற்று வடமாநிலங்களில் இருந்து வந்த ரெயில்களில் சோதனை நடத்தினர். அதன்படி அசாம் மாநிலம் திருப்ருகாரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் ரெயில் நேற்று ஜோலர்பேட்டை ரெயில் நிலையத்தில் வந்து நின்றது.
அந்த ரெயிலில் போலீசார் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர். அப்போது முன்பதிவு இல்லாத ஒரு பெட்டியின் கழிவறை அருகே ஒரு சாக்கு மூட்டை கிடந்தது. இதையடுத்து போலீசார் அதை எடுத்து பிரித்து பார்த்தனர். அதில் 14 பண்டல்களில் 28 கிலோ கஞ்சா இருந்தது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் இது குறித்து வழக்குப்பதிவு செய்து ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த மர்ம நபர்கள் குறித்தும், அவற்றை எங்கிருந்து, கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கஞ்சா கடத்தி வந்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.