கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன் மறைவு- செல்வப்பெருந்தகை இரங்கல்

கேரள முன்னாள் முதல்-மந்திரி வி.எஸ்.அச்சுதானந்தன் இன்று காலமானார்.;

Update:2025-07-21 18:30 IST

சென்னை,

கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன் (வயது 101) வயது மூப்பு காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார். ஏற்கனவே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் திருவனந்தபுரம் மருத்துவமனையில் உள்ள அச்சுதானந்தன் உடல் நலன் குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோவிந்தன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

அப்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டது.கடந்த சில மணி நேரங்களாக அவரது ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்ட நிலையில் அச்சுதானந்தன் இன்று மாலை காலமானார்.அச்சுதானந்தன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன்றனர்.

அந்தவகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில்,

கேரளா மாநிலத்தின் முன்னாள் முதல் - மந்திரி தோழர்.வி.எஸ்.அச்சுதானந்தன் வயது மூப்பின் காரணமாகவும் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுதந்திரப் போராட்டத் தியாகி. இந்தியாவின் மூத்த இடதுசாரித் தலைவர் அச்சுதானந்தன். பல போராட்டங்களைச் சந்தித்து அரசியலில் தனது முத்திரையைப் பதித்தவர். தனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், சுமார் ஐந்தரை ஆண்டுகள் சிறைவாசத்தையும், நான்கரை ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையையும் அனுபவித்தார். 1964 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஐ நிறுவிய 32 உறுப்பினர்களில் இவரும் ஒருவர். 1980 முதல் 1992 வரை சி.பி.எம் கேரள மாநிலக் குழுவின் செயலாளராகப் பணியாற்றினார். கேரளா மாநிலத்தில் 2006-ம் ஆண்டு முதல்2011-ம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தவர்..

கேரள அரசியலில் ஒரு வலிமையான தலைவராக அறியப்பட்டவர். அவரது எளிமை, நேர்மை மற்றும் மக்கள் நலன் மீதான அக்கறை ஆகியவை அவரை கேரள மக்களின் மனதில் நீங்கா இடம் பெறச் செய்தன. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்கள், உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்