பட்டாசு ஆலை விபத்து: 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரண நிதி - மு.க.ஸ்டாலின் உத்தரவு
விபத்து நடந்த ஆண்டியபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையின் உரிமை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.;
சென்னை,
சிவகாசி அருகே ஆண்டியபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், நாரணாபுரம் கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், நாரணாபுரம் கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (21.07.2025) பிற்பகல் சுமார் 3.50 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் கீழத்திருத்தங்கல், முத்துராமலிங்கம் காலனியைச் சேர்ந்த கார்த்திக் (வயது 23) த/பெ.தங்கராஜ் மற்றும் இரண்டு நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இவ்விபத்தில் காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நாகலட்சுமி (வயது 55) க/பெ.முனியசாமி, மாரியம்மாள் (வயது 53) க/பெ.முத்துவேல் மற்றும் மாரியம்மாள் (வயது 50) க/பெ.தங்கராஜ் ஆகிய மூன்று நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.
இந்த விபத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா நான்கு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும், லேசான காயமடைந்து மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.