'முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்' - எடப்பாடி பழனிசாமி
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.;
திருவாரூர்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. காலை நடைபயிற்சியின்போது மு.க.ஸ்டாலினுக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டதாகவும், தற்போது அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அப்பல்லோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பூரண குணமடைய பிரார்த்தனை செய்வதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் எடப்பாடி பழனிசாமி, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் பிரசார பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி பழனிசாமி, "முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி வந்துள்ளது. அவர் பூரண குணமடைய வேண்டும் என என் சார்பாகவும், மக்கள் சார்பாகவும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்தார்.